உணர்ச்சி வசப்படும்பொது, சிலர் கத்துவார்கள், சிலர் மௌனம் சாதிப்பார்கள். வேறு சிலர், அந்த உணர்ச்சியை ஏற்காது, பொய்யாகச் சிரிப்பார்கள். நானோ, `ஏன் இப்படி?’ என்று யோசிக்க ஆரம்பிப்பேன்.
பிறரது துன்பங்களைப்பற்றிக் கேள்விப்படும்போது, அவை என்னையே தாக்குவதுபோல் ஒரு பிரமை எழ, எழுத்து வடிவில் ஒரு வடிகால், தீர்வு காண முயல்கிறேன். அப்படி எழுதியதுதான் `நாற்று’. இத்தொகுப்பின் தலைப்புக்குக் காரணமாக இருந்தது.
ஒரு திரைப்பட நடிகைமேல் காதல் வயப்பட்டு, அவளுக்குக் கல்யாணம் என்றால், தற்கொலைக்குக்கூடத் துணியும் ரசிகர்களைப்பற்றி படித்திருப்பீர்கள். அதேபோல், ஒரு பெண் எழுத்தாளர்மேல் பைத்தியமாக இருப்பவர்தான் `மானசீகக் காதல்’ கதையின் நாயகன். இத்தகைய ஒருதலைக் காதலுக்கு வயது ஒரு பொருட்டே இல்லை என்பது விசேஷம்.
நாற்பது வயதுக்குமேல் பெண்கள் அழகையும், இளமையையும் இழந்து, அவர்களது கணவன்மார்களின் கேலிக்கும் ஆளாவது சர்வசாதாரணமாக நம்மிடையே நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த ஆண்கள் தாமும் வயதானவர்களாகத்தானே — அடர்த்தியான தலைமயிரை இழந்து, தொந்தி போட்டு — ஆகிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணிப் பார்ப்பது கிடையாது. `கண்ணாடிமுன்’ பத்திரிகையில் வெளியானபோது, பல ஆண்கள், `ஒங்க கதையைப் படிச்சேங்க,’ என்று கூறிவிட்டு, வெட்கம் கலந்த சிரிப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். `மனித மனம் ஏன் இவ்வளவு வக்கிரமாக இருக்கிறது!’ என்று சிரித்தபடியேதான் நானும் இக்கதையை எழுதினேன்.
தம் மனைவியை பிறர் எதிரில் பழித்தால் தாம் உயர்ந்துவிடுவதைப்போல சில (பல?) ஆண்கள் நினைக்கிறார்கள். எல்லாவற்றையும், வாய் திறவாமல், ஏன் ஒரு பெண் ஏற்கிறாள் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். தொண்ணூறு வயதான ஒருவர், தான் பதினாறு வயதாக இருந்தபோது தன் தந்தை அம்மாவை ஓயாது அடித்ததால், அவர் முதுகில் ஏறி, குடுமியைப் பிடித்து உலுக்கி, `இனிமே அம்மாவை அடிக்கமாட்டேன்னு சொல்லு!’ என்று மிரட்டியதையும் வாய்கொள்ளாச் சிரிப்புடன் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின் தாக்கத்தால் `அடிபட்டவர் கை அணைக்குமா?’ கதையை ஆரம்பித்தேன். பாதியில் கதை நின்றுவிட்டது. ஒரு பெண் வதையை எப்படிப் பொறுத்துப்போகிறாள், அவளுக்கு உணர்ச்சியே கிடையாதா என்பதற்கு விடை கிடைக்கவில்லை. `SLEEP ON IT’ என்று கூறுவார்களே, அதேபோல், கதையின் முடிவு கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு இரவு தூங்கப்போனேன். முடிவு எனக்கே ஆச்சரியத்தை விளைவித்தது. பெண்களுக்கு மிகவும் பிடித்த கதை இது. சில ஆண்களை அதிரவைத்தது (`நான் இவ்வளவு மோசமில்லையே?’).
குறிப்பிட்ட சில தெய்வங்களை வேண்டிக்கொண்டால், வெளிநாடு செல்ல விசா கிடைக்கும் என்று ஆன்மிகப் பத்திரிகைகளில் போடுவார்கள். வெளிநாடு சென்றவர்கள் எல்லாருமே மகிழ்ச்சியுடன் இருப்பதில்லை. கனவு வேறு, நிதர்சனம் வேறு என்று புரிய, கசப்படைகிறார்கள். உதாரணம்: `மோகம்’ கதையில் வரும் முடிவெட்டுத் தொழிலாளி.
எல்லாவற்றையும் நானே விளக்கிவிட்டால் எப்படி! நீங்கள் படித்துத்தான் பாருங்களேன்!
நிர்மலா ராகவன்,
மலேசியா
Dear publishers and self-publisher, kindly be informed that UBSM & E-Sentral are now using the same publisher panel for your convenience in uploading and updating your eBook content.
If you wish to proceed to log in/ sign up, click Yes. Otherwise, kindly click the X icon to close.