[ No Description ]



 



FREE

மனித வாழ்க்கையின் மகத்தான சாதனை என்று நீங்கள் எதை வேண்டுமானாலும் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் மனம் தளராமல் அடுத்தடுத்து நகர்ந்து கொண்டேயிருப்பது தான் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். 1989 ஆம் ஆண்டுக் கல்லூரிப் படிப்பை காரைக்குடியில் முடிக்கும் வரையிலும் வாழ்க்கையில் உள்ளே, வெளியே எந்தப் போராட்டங்களையும் நான் பார்த்தது இல்லை. நடுத்தரவர்க்கத்தின் இயல்பான ஆசைகள் எப்போதும் போல கிடைத்தது. ஆனால் அதற்குப் பிறகு கடந்து போன 25 வருடங்களில் போராட்டங்களைத் தவிர வேறு எதையும் நான் பார்த்ததே இல்லை. ஒவ்வொன்றும் போராட்டத்தின் வழியே தான் கடக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு போராட்டங்களும் ஒரு அனுபவத்தினைத் தருகின்றது. அந்த அனுபவம் ஒரு பாடத்தைக் கொடுத்து விட்டு நகர்கின்றது. அடுத்தடுத்து புதிய பாடங்கள் புதிய அனுபவங்கள். மாறிக் கொண்டேயிருக்கும் வாழ்க்கையில் கற்றுக் கொள்வது மட்டுமே பிரதானமாக உள்ளது. எனக்குக் கிடைத்த அதிகப்படியான அனுபவங்கள் தான் என் எழுத்துப் பயணத்திற்கு உறுதுணையாக உள்ளது. 2009 முதல் 2016 வரைக்கும் ஏறக்குறைய 7 ஆண்டுகள் இணையம் வழியே கற்றதும் பெற்றதும் ஏராளம். வரலாறு, கட்டுரை வடிவங்களில் என் எழுத்துப் பயணம் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்க இந்த முறை என் சுய தேடலை இந்த மின் நூலில் உங்களுக்கு வாசிக்கத் தந்துள்ளேன். 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 20ந் தேதி என் முதல் மின் நூலான “ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்” வெளிவந்தது. மூன்று ஆண்டுகள் கழித்து எனது எட்டாவது மின் நூல் “பழைய குப்பைகள்”. இது என் வாழ்வின் காலடித்தடங்கள். ஒவ்வொன்றும் குப்பைகளாக மாறி உரமாக மாறியவை. நான் வெளியிட்ட ஏழு மின் நூல்களும் 1,70,000+ பேர்களை சென்றடைந்துள்ளது. நான் கடந்து வந்த பாதையை, என் குடும்பச் சூழ்நிலை, பின்னணி, எண்ணங்கள், நோக்கங்கள் போன்றவற்றை ஓரளவுக்கு இந்த மின் நூல் வழியே உங்களால் புரிந்து கொள்ள முடியும். இது முழுமையான சுயசரிதை அல்ல. நமக்கான அடையாளத்தை நாமே உணர்ந்து கொள்ள முடியாவிட்டால் நாம் வாழும் சமூகத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும்? என் புரிதலின் முதல் பகுதி இது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் பயணச்சுவடுகள் இதில் எங்கேனும் தெரியக்கூடும். உங்களின் விடமுடியாத கொள்கைகள் காலப்போக்கில் கேள்வியாக மாறி கேலி செய்யும். மனைவியும், குழந்தைகளும் கேட்கும் கேள்விகள் அனைத்தும் உங்களின் அடிப்படை சித்தாந்த அஸ்திவாரத்தை ஆட்டம் காணவைக்கும். உறவுக்கூட்டம் உறங்க விடாமல் தவிக்கவிடும். மொத்தத்தில் “பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை” என்பதனை மொத்த உலகமும் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். வாழ்க்கையில் எனக்கு உருவாகும் சோர்வினை எழுத்துலகம் மூலமாக ஒவ்வொரு முறையும் கழுவி துடைத்துக் கொள்கிறேன். இதுவே காயங்களுக்கு மருந்து போடுவது போல உள்ளது. 75 வயதுக்குண்டான அனுபவங்கள் எனக்குக் கிடைத்த காரணத்தினால் இந் நூலைப் படிக்கும் உங்களுக்கு உண்மையான பரவத்தைத் தரும் என்றே நம்புகிறேன். பணம் என்ற ஒற்றைச்சொல் உங்களின் இறுதிப் பயணம் வரைக்கும் படாய்படுத்தும். ஆனால் அதற்கு உங்களின் ஆரோக்கியம் என்பதனை விலையாக வைக்க வேண்டும் என்பதனை உணர்ந்தவர்கள் என்னைப் போல “ருசியான வாழ்க்கை” வாழத் தெரிந்தவர்கள். அளவான பணம் மூலம் நீங்கள் வாழ முடியும். ஆனால் அளவற்ற பணமென்பது எதனையும் ஆள முடியும் என்றாலும் முழுமையாக வாழ முடியுமா? என்று கேட்டுக் கொள்பவனின் காலடித் தடமிது. பொருள் சேர்க்க வேண்டும் என்றால் “இப்படித்தான் வாழ வேண்டும்” என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் ஒழுக்க விதிகளை கடைபிடிப்பவனின் சங்கட விதிகளை சமரசமின்றி எழுதியுள்ளேன். இதனைச் சுற்றியுள்ள உலகம் ஏற்றுக் கொள்ளாமல் ஏளனப்படுத்தும் என்பது எத்தனை உண்மையோ அந்த அளவுக்குப் பிடிவாதமாக “இப்படியே வாழ்ந்து பார்த்து விட்டால் என்ன?” என்ற கேள்வியோடு ஒவ்வொரு நிகழ்வினையும் ரசனையோடு சமூகப் பார்வையோடு எழுதியுள்ளேன். என் பயணம் சோர்வின்றி இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. என் ஆரோக்கியம் மட்டுமே பெரும் சொத்தாக உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் நானே உருவாக்கிக் கொண்ட காயங்களை கடந்த ஏழு ஆண்டுகளாக எழுத்து வழியாக மருந்திட்டு வந்துள்ளேன். வாழும் போதே வெளிப்படைத் தன்மையை எல்லா இடங்களிலும் நீக்கமற விதைத்து வந்து உள்ளேன். என் ஆரோக்கியம் முழுமையாக இருக்கும் வரையிலும் இந்த எழுத்துலகத்தில் என் தடம் மாறாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்றே நம்புகின்றேன். இந்நூலுக்கு விமர்சனத்தின் வாயிலாக தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியும் மாறாத அன்பும்.
view book