சதிகள் இலவசம் by தேவிபாலா

Synopsis
கையகலக் கண்ணாடியை வைத்துக் கொண்டு, பவுடர் பூசும் முயற்சியில் வெகு தீவிரமாக இருந்தாள் மேனகா.
அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டிருந்த அம்மா, எட்டிப் பார்த்தாள் மெல்ல.
“எங்கேயாவது போறியா மேனகா?”
“லைப்ரரிக்கும்மா!”
“எங்க போனாலும் அப்பா வர்றதுக்குள்ள வீடு வந்துரு. சாயங்கால நேரத்துல, வயசு வந்த பெண்ணை ஏன் வெளிய அனுப்பறன்னு சத்தம் போடுவார்!”
மேனகா உதட்டுக்குள் முணுமுணுத்தாள்.
“ஆமா... அப்பாவோட பொறுப்பு தெரியாது? வயசுப் பெண்ணை வீட்ல வச்சுட்டு, ராத்திரி அப்பா அடிக்கற கூத்து...! ப்ச்!”
வேறு புடவை மாற்றி அணிந்து கொண்டாள்.
புறப்பட்டு விட்டாள்.
“ஏண்டீ... லைப்ரரி போறேன்னு சொல்லிட்டு, கையில புத்தகம் இல்லாம போறியே!”
மேனகா ஒரு நொடி தடுமாறிப் போனாள்.
“அ... அது வந்து... நம்ம பங்கஜம் இல்லை... அவகிட்ட இருக்கு புத்தகம்!”
அடுத்த நொடியும் அங்கே தாமதித்தால், இன்னும் உளற வாய்ப்புண்டு என்பதால் சரேலென வாசலை அடைந்து விட்டாள். ஓட்டமும் நடையுமாக தெருவைத் தாண்டியதும், நிம்மதியாக மூச்சு வந்தது.
வீடு சிந்தாதிரிப்பேட்டையில்!
சாமி நாயக்கன் தெருவில்
நடந்தே சிம்சனை அடைந்து, குறுக்கே ஓடிய அகலசாலையைக் கடந்து, ராஜாஜி மண்டபத்தைத் தொட்டு, விலகி, ஆடம்ஸ் சாலையில் கால் பதித்து, நாலடி நடப்பதற்குள், பின்னால் வந்தது அந்த நர்மதா வண்டி.
“நடையா இது நடையா!”
'விருட்'டென்று திரும்பினாள்.
“அவளை உரசியபடி வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தினான் வெங்கடேசன்.”
“சரியா வந்துட்டியே! ம் ஏறி ஓக்காரு!”
பயத்துடன் விழிகளை ஒருமுறை ஓட விட்டாள்.
“யாரும் வர மாட்டாங்க. தைரியமா ஏறி ஒக்காரு!”
அவள் உட்கார்ந்ததும், சட்டென வண்டியைக் கிளப்பி, டி.வி. ஸ்டேஷனை தொட்டுக் கொண்டு, பாலமேறி, பீச் ரோட்டில் பிரவேசித்து எம்.ஜி.ஆர். சமாதி கடந்து, காந்தியைக் குறிவைத்து விரட்டினான்.
நாலு மணி வேளை... வெயில் இன்னும் முற்றிலுமாக விலகாமல், கடற்காற்று வரட்டுமா என்று கேட்கத் தொடங்கியிருந்த நேரம்.
காந்தி சிலையை அணுகி, சற்று உள்பக்கமாக வண்டியை நிறுத்திப் பூட்டிவிட்டு, நடந்தார்கள். சற்று ஒதுக்குப் புறமான பகுதியைத் தேர்ந்தெடுத்து உட்கார,
“ம், சொல்லு மேனகா!”
“நீங்கதான் எதையும் சொல்றதில்லை!”
“என்ன சொல்லலை உனக்கு?”
“நீங்க வேலை பாக்கற இடத்தைச் சொல்லலை. உங்களுக்கு என்ன சம்பளம்னு சொல்லலை. உங்க அப்பா, அம்மா பத்திச் சொல்லலை!”
“எத்தனை நாளா பழகறோம் ரெண்டு பேரும்?”
“நாலு மாசமா!”
“அதுக்குள்ள அவசரப்பட்டா? அப்பா, அம்மா சின்ன வயசுல செத்தாச்சு. எப்படியெல்லாமோ வளர்ந்து, இப்ப இப்படி இருக்கேன். உத்யோகம் ஒரு கம்பெனில விற்பனை உதவியாளன். ஆயிரத்துக்கும் மேல சம்பளம். போதுமா விவரங்கள்!”
“நம்மோட காதல் எங்கப்பாவுக்குத் தெரிஞ்சா, நிலைமை மோசமாயிரும் வெங்கட். எனக்கு பயமாயிருக்கு!”
“இன்னும் நேரம் வரலை. நானே உங்கப்பாவைச் சந்திச்சுப் பேசறேன்! சுண்டல் சாப்டலாமா?”
ரெண்டு பொட்டலம் சுண்டல் வாங்கினான்.
ஒன்றை அவளிடம் நீட்டும் போதுதான், அதை கவனித்தாள்.
“என்ன வெங்கட் இது?”
“எது மேனகா?'“
அவன் முன் கையில் மணிக்கட்டுக்கும் சற்று மேலே, ஓரங்குல நீளத்துக்கு 'B' என்ற எழுத்து பச்சை குத்தப் பட்டிருந்தது.
அதை அவள் சுட்டிக் காட்டிய நிமிடம்,
அவன் முகம் சட்டென ஒரு நொடி, இருளுக்குப்போய், மறுபடியும் வெளிச்சம் வந்தது.
Reviews
Write your review
Wanna review this e-book? Please Sign in to start your review.